×

ராமர்கோயில் மூலம் ரூ.4 லட்சம் கோடி கிடைக்கும்: அண்ணாமலை புது கணக்கு

சென்னை: ராமர்கோயில் மூலம் ரூ.4 லட்சம் கோடி கிடைக்கும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ சார்பில், பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ராமர் கோயில் கட்டி என்ன லாபம் என சிலர் கேட்கின்றனர். உலகத்தில் ஒரு கோயிலுக்கு, மசூதிக்கு, ஆலயத்திற்கு அவரவர் மதத்தை சேர்ந்தோர் செல்கின்றனர். இன்று சவுதி அரேபியாவில் மெக்கா உள்ளது. இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரைக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு கோடி பேர் செல்கின்றனர். இதனால் சவுதிக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் வருகிறது. கிறிஸ்தவ நண்பர்கள் வாடிகனுக்கு செல்கின்றனர். சென்ற ஆண்டு 80 லட்சம் பேர் சென்றனர். வாடிகனுக்கு வந்த வருமானம் 315 பில்லியன் டாலர். திருப்பதிக்கு 2.5 கோடி பேர் சென்றனர்.

கடந்தாண்டு வந்த வருமானம் 1200 கோடி. அடுத்தாண்டு அயோத்திக்கு ஐந்து கோடி செல்வர். அப்போது உ.பிக்கு வரக்கூடிய வருமானம் நான்கு லட்சம் கோடி ரூபாய். தமிழக அரசின் பட்ஜெட் 3 லட்சம் கோடி ரூபாய். அடுத்தாண்டு அயோதிக்கு செல்லக்கூடிய ஐந்து கோடி பேர் செல்லும் போது, அங்கு ஏற்படுத்தக்கூடிய பொருளாதார மாற்றம் மட்டுமே இத்தனை லட்சம் கோடி. இதில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரி மட்டுமே கிடைக்கும். இன்று தமிழகத்தில் எத்தனை கோயில், மசூதி, தர்கா, ஆலயம் உள்ளது. இதையெல்லாம் ஒன்றாக இணைத்தாலே சாதாரணமாக 3 லட்சம் கோடி வருமானத்தை கொண்டு வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

* வழக்குகளில் என்னை சிக்க வைக்காதீர்கள்
பெரம்பூர் பகுதியில் இருந்து அண்ணாமலையை ஊர்வலமாக அழைத்துச் செல்ல சில ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தகவல் அறிந்த அண்ணாமலை, பெரம்பூர் வழியாக வருவதை தவிர்த்து ரெட்டேரி வழியாக வந்து சிவ இளங்கோ சாலை வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பின்புறமாக வந்தார். இதனால் பெரம்பூர் பகுதியில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை ஆவலாக காத்திருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முக்கிய நிர்வாகிகளான கரு.நாகராஜன் மற்றும் பால் கனகராஜ் ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் பகுதியில் அண்ணாமலையை அழைத்து வர காத்திருந்தனர்.

ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பின்புறமாக அண்ணாமலை வந்து சேர்ந்ததால், அந்த தகவல் அறிந்து அதன் பின்பு நிகழ்ச்சி தொடங்கியதும் அவர்கள் தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்தனர். நிகழ்ச்சி முடிந்து அண்ணாமலை செல்லும் போது கட்சி நிர்வாகிகளிடம் சென்னையில் ஊர்வலமாக செல்வதற்கு தடை விதித்துள்ளனர். நீங்கள் என்னை கேட்காமல் இது போன்ற ஏற்பாடுகளை செய்தால் நான் இப்படித்தான் உங்களிடம் கூறாமல் வேறு வழியில் வருவேன். என்னை சிக்கலில் மாட்டி விடலாம் என்று நினைக்காதீர்கள்.நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் புதிய காக்கிச்சட்டை அணிந்து இருந்தனர்.

ஏற்கனவே உள்ளே ஒரு சட்டை அணிந்து அதற்கு மேல் இந்த காக்கி சட்டை அணிந்திருந்தனர். குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக அளவில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பாஜவினர் ஏற்கனவே தாங்கள் வெள்ளை கலரில் சட்டை அணிந்து இருந்தனர், கடைசி நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் வராததால் குறிப்பிட்ட காக்கி சட்டைகளை பாஜவினரே அணிந்து தொழிலாளர்கள் போல காட்சி அளித்தனர்.

அண்ணாமலையின் நிகழ்ச்சிக்கு ஒரு மணி முதலே வரத் தொடங்கி விட்டனர். ஆனால் வழக்கம் போல நிகழ்ச்சி ஆரம்பிக்கும் இடத்திற்கு நான்கு முப்பது மணிக்கு அண்ணாமலை வந்தார். இதனால் கட்சியினர் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் காத்திருந்தனர். மாறி, மாறி நேரத்தை குழப்பியதால் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். கொளத்தூர் நிகழ்ச்சிக்கு வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்திருந்தனர். வயதான பாட்டிகளுக்கு 300 ரூபாய் எனவும், வயது குறைவான குடும்ப பெண்களுக்கு 400 ரூபாய் எனவும், ஆண்களுக்கு 500 ரூபாய் எனவும் பேசி அழைத்து வந்திருந்தனர்.

* மாற்றுக்கட்சி உருட்டு
வழக்கமாக அண்ணாமலை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பாஜவில் இணைகிறார்கள் என சில குறிப்பிட்ட நபர்களை நிற்க வைத்து அவர்களுக்கு பாஜவின் துண்டு போர்த்தி அவர்களை வரவேற்பது வழக்கமாகிவிட்டது. இதேபோன்றுதான் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்துள்ளார்கள், அவர்களை வரவேற்கிறோம் என சில நபர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டார்கள். அவர்கள் எந்த பொறுப்பில் உள்ளனர் என்பதை குறிப்பிடவில்லை. அவர்கள் உண்மையிலேயே அந்தந்த கட்சியில் இருக்கிறார்களா என்பது கூட யாருக்கும் தெரியாது இதை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாஜவினர் தொடர்ந்து செய்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மோசடியில் ஈடுபட்ட நடிகை நமீதாவின் கணவர் உட்பட சிலரை அண்ணாமலை கட்சியிலிருந்து நீக்கினார். இதில் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மஞ்சுநாத் என்பவரும் ஒருவர். பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நேற்று கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சியில், மஞ்சுநாத் சர்வ சாதாரணமாக சுற்றிக்கொண்டு பாஜவினரிடம் பேசிக் கொண்டிருப்பதை அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர்.

* துப்பாக்கியால் சர்ச்சை
அண்ணாமலை நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கும்போது, அவருக்கு பாஜவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெரிய துப்பாக்கி ஒன்றை பரிசாக வழங்கினார். அதனை அண்ணாமலை மேலே தூக்கி காண்பித்து ஆரவாரம் செய்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. போலீசார் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கி எப்படி வந்தது என தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இறுதியில் அது ஏர் கன் எனப்படும் டம்மி துப்பாக்கி என்பது தெரிய வந்தது.

The post ராமர்கோயில் மூலம் ரூ.4 லட்சம் கோடி கிடைக்கும்: அண்ணாமலை புது கணக்கு appeared first on Dinakaran.

Tags : Ram ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,president ,Ram temple ,Tamil Nadu BJP ,Akaram ,Perambur ,Tamil Nadu BJP… ,temple ,
× RELATED ஆந்திராவில் இறுதிகட்ட...